search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் ரத்து"

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து அத்தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் ஆதங்கத்துடன் கருத்துக்களை தெரிவித்தனர். #LokSabhaElections2019 #VelloreConstituency
    வேலூர்:

    இறுதிக்கட்ட பிரசாரம் 6 மணிக்கு முடிந்த நிலையில், தேர்தல் ரத்து என்பது வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் இப்படி அறிவித்தது வேதனை அளிக்கிறது. அரசு அதிகாரிகள் இரவு பகலாக உழைத்த உழைப்பு வீணடிக்கப்பட்டு விட்டது. மக்களை தேர்தல் கமி‌ஷன் ஏமாற்றிவிட்டது.

    தமிழகத்தில் பல இடங்களில் பணம் கொடுத்த புகார்கள் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 15 நாட்களுக்கு முன்பு பணம் கைப்பற்றப்பட்டதற்கு இப்போது தேர்தலை ரத்து செய்திருப்பது தேவையில்லாத ஒன்று என்று பொதுமக்கள் தங்களது கருத்தை கூறினர்.

    தேர்தல் ரத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பரந்தாமன் முன்னாள் எம்.எல்.ஏ. - வேலூர்

    ரத்த செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலை உடனடியாக மறு தேதி அறிவித்து நடத்த வேண்டும். வேலூருக்கு எம்.பி. வேண்டும். இவ்வளவு நாட்கள் நடந்த மக்கள் உழைப்பிற்கு பரிகாரம் வேண்டும்.

    சுமதி - சத்துவாச்சாரி

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிறதா? அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறதா என தெரியவில்லை. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை.

    மீனா - வேலப்பாடி

    வேட்பாளரிடம் பணம் பறிமுதல் செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தி உடனே தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு தேர்தல் ரத்து என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கபட்டுள்ளது.

    ஷீலா - தோட்டபாளையம்

    தேர்தல் ரத்து செய்தது சரியான நடவடிக்கை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எந்தவித நலத் திட்டங்களையும் செய்யமாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறவே ஒழிக்க வேண்டும்.

    தாமோதரன் - ஆம்பூர்

    தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்திருப்பது சரி என்றால் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தலையும் ரத்து செய்திருக்க வேண்டும்.


    ராம்நாத் - ஆம்பூர்

    தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க சென்னையில் வேலை பார்க்கும் நான் விடுப்பு எடுத்து ஆவலாக ஊருக்கு வந்தேன், ஆனால் தேர்தல் ஆணையம் திடீரென நேற்று தேர்தலை ரத்து செய்து விட்டது.

    இது எனக்கும் என்னை போன்ற இளம் வாக்காளர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    இக்பால் வாணியம்பாடி

    தேர்தலை ரத்து செய்திருப்பது சரியல்ல, இதனால் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பணத்தை பறிமுதல் செய்த அன்றே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு இவ்வாறு நடந்து கொள்வது தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.

    சுகுமார் - வாணியம்பாடி

    தேர்தல் ரத்து என்பது வேலூர் மாவட்ட தொகுதியில் மட்டும் செய்திருப்பது சரியானதல்ல. எல்லா தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தை திரும்ப பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தேர்தல் நடப்பதற்கு முன்பே இவ்வளவு குளறுபடி என்றால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் என்னென்ன நடக்கும் தேர்தல் ரத்து செய்தது ஒரு விதத்தில் நல்லது தான். ஆனாலும் வெளியூரில் இருந்து லீவு போட்டு ஓட்டுபோட வந்தவர்களுக்கு ஏமாற்றம். மீண்டும் அவர்கள் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

    தேர்தல் கமி‌ஷன் எடுத்த முடிவு சரிதான். அரசியல்வாதிகளிடம் பிடிபட்ட பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியாக பல தரப்பு மக்களும் தேர்தல் கமி‌ஷன் எடுத்த ரத்து முடிவுக்கு தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மீண்டும் தேர்தல் நடத்தும் போதாவது பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினர். #LokSabhaElections2019 #VelloreConstituency
    ×